

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே.31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2026 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், மே 24ம் தேதியோடு லீக் போட்டிகள் முடிவடைந்தன. இதில் பெங்களூரு, குஜராத், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
தொடர்ந்து தகுதிசுற்றில் 1ல், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பெங்களூரு.
தகுதிசுற்று 1-ல் தோற்றாலும், தகுதிசுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத். ஹைதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, கடந்த 2025 சீசனில் தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராடுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது சொந்த மைதானத்தில் இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது.