

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே 'பிளே-ஆப் சுற்றை உறுதி செய்துவிட்ட முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ் சர்சை எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், 2 முறை சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதி ராக) 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
அந்த அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென் (5 அரைசதத்துடன் 555 ரன்கள்), அபிஷேக் ஷர்மா (ஒரு சதம், 3 அரைச தத்துடன் 507), இஷான் கிஷன் (5 அரைசதத்துடன் 490), டிராவிஸ் ஹெட் (367 ரன்), நிதிஷ் குமார் ரெட்டி (235) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் இஷான் மலிங்கா (17 விக்கெட்). சகிப் ஹூசைன், ஹிங்கே, கம்மின்ஸ், ஷிவாங் குமார் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர்.
பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி (ஐதராபாத், சென்னை, 2 முறை மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) கண்டு 18 புள்ளிகள் எடுத்துள்ளது.
பெங்களூரு அணியில் விராட் கோலி (ஒரு சதம், 4 அரைசதத்துடன் 542 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 412). ரஜத் படிதார் (3 அரைசதத்துடன் 337), டிம் டேவிட் (262) நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (24 விக் கெட்).
ஹேசில்வுட் ராசிக் சலாம், குருணல் பாண்ட்யா மிரட்டுகிறார்கள். பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ரஜத் படிதார் களம் திரும்புவார் என்று தெரிகிறது.
பெங்களூரு அணி வெற்றி வேட்கையை தொடருவதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க தீவிரம் காட்டும். அத்துடன் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், டாப்-2 இடத்துக்கும் ஐதராபாத் குறி வைக்கும். மொத்தத்தில் சமபலம் வாய்ந்த அணிகள் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் ஐதராபாத்தும், 12-ல் பெங்களூருவும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ரவிச்சந்திரன் சமரன், கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, பிரபுல் ஹிங்கே, சகிப் ஹூசைன்.
பெங்களூரு: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் அய்யர், டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரஜத் படிதார் (கேப்டன்) அல்லது ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் ஷர்மா, ஹேசில்வுட், ராசிக் சலாம்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.