International Olympic Day 2026: உடற்பயிற்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்பு கொண்டாட்டம்!

"விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; அது உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்திமிக்க ஆயுதம்"
International Olympic Day 2026
Published on

உலகெங்கிலும் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் ஒலிம்பிக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1894ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நடப்பு 2026ஆம் ஆண்டு ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள், மக்களின் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்களின் ஆரோக்கியமான இலக்குகளை நோக்கி மக்கள் அனைவரும் "முதல் அடியை எடுத்து வையுங்கள்" (Take the first step) என்ற உன்னத விழிப்புணர்வுடன் இந்த உலகளாவிய இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உலகெங்கிலும் உள்ள மக்களை தினமும் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில், இந்த 'லெட்ஸ் மூவ்' உலகளாவிய பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. நவீன டிஜிட்டல் சவால்கள், ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்புகள் மூலம் உலக மக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.

விளையாட்டுத் துறையில் உலகளாவிய திறமைகளை வெளிப்படுத்துவதுடன், 'சிறப்பு, நட்பு மற்றும் மரியாதை' ஆகிய மூன்று முதன்மை ஒலிம்பிக் மாண்புகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். விளையாட்டுத் துறையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உறுதி செய்ய இந்தியாவில் இந்த ஆண்டு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, அபினவ் பிந்த்ரா அறக்கட்டளை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுச் செயல்பாடுகளையும் நாடு முழுவதும் ஒருங்கிணைத்துள்ளது.

"விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; அது உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்திமிக்க ஆயுதம்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி கூறியுள்ளார். உடல்நலனே நல்வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்தி, உலகிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த 2026 ஒலிம்பிக் தினம் கோலாகலமாக அரங்கேறி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com