

மோசமான தோல்வி எதிரொலியாக மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலக முடிவு செய்துள்ளார்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி. 10 தோல்வி என 8 புள்ளியுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அணியின் மோசமான தோல்வியால் கடும் விமர்சனத்திற்குள்ளான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்து விலக தீ0ர்மானித்துள்ளார். அணி நிர்வாகத்திடமும் இது பற்றி முறைப்படி தெரியப்படுத்திவிட்டார்.
2024-ம் ஆண்டு குஜராத் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் 32 வயதான ஹர்திக் பாண்ட்யாவை வாங்கிய மும்பை அணி நிர்வாகம் உடனடியாக கேப்டனாக்கியது.
மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது சொந்த ஊர் ரசிகர்களே ஹர்திக் பாண்ட்யாவை கேலி செய்தனர்.
அந்த ஆண்டில் லீக்குடன் வெளியேறிய மும்பை அணி கடந்த சீசனில் பிளே-ஆப் சுற்று வரை முன்னேறியது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ரையான் ரிக்கெல்டன், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் பாண்ட்யாவால் அணியை எதிர்பார்த்த அளவுக்கு வழிநடத்த முடியவில்லை.
காரணம் என்ன?
இது குறித்து ஐ.பி.எல். வட்டாரங்கள் கூறுகையில்,"நடப்பு ஐ.பி.எல். தொடரின்போது ஹர்திக் பாண்ட்யா மன உளைச்சலுக்கும், முழுமையான சோர்வுக்கும் உள்ளாகி இருந்தார்.
மேலும், முதுகில் ஏற்பட்ட காயத்தாலும் அவதிப்பட்டார். 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பு தகர்ந்ததும், இனி தான் அணியில் நீடிக்கப்போவதில்லை என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டார்.
கடந்த 3 ஆண்டுகள் அவருக்கு எதுவும் எளிதாக இருக்கவில்லை. 2024-ம் ஆண்டில் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி கிண்டல் செய்தனர். இந்த சீசனிலும் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை.
2021-ம் ஆண்டில் அவர் மும்பை அணியைவிட்டு வெளியேறியபோது இருந்த வீரர்களின் ஓய்வறை, 2024-ம் ஆண்டில் திரும்பியபோது முன்பு போல் இல்லை. சீனியர் வீரர்கள் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.
கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சாதகமான முடிவுகள் கிடைத்தால் நீங்கள் விரக்தி அடையமாட்டீர்கள். ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் இழுக்கும்போது, ஒரு கட்டத்தில் தொடர்ந்து செல்வதற்கான மனவலிமை இருக்காது.
எனவே தான் தொடரின் பாதியிலேயே அடுத்த சீசனில் மும்பை அணியில் இருக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டார். ஒன்று மட்டும் உறுதி. அவர் மும்பை அணியுடனான தனது பயணத்தை முடித்துவிட்டார். ஆகஸ்டு மாதத்தை நெருங்கும்போது அவருடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது தெரிய வரும்' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மும்பை அணியின் கேப்டனாக மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் அல்லது இளம் வீரர் திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.