உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் க்ரூப் I-இல் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் மோதின. நியூ யார்க் நகரில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.
போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டின. எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்த பிரான்ஸ் ஒருபக்கம் மல்லுக்கட்ட மறுபக்கம் செனகல் அணியும் கோல் அடிக்க தீவிரம் காட்டிது. ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் மைக்கல் ஆலிஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ நட்சத்திர வீரர் எம்பாப்பே கோல்-ஆக மாற்றினார். இதன் காரணமாக பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு செனகல் மற்றும் பிரான்ஸ் என இரு அணிகளிலும் வீரர்கள் மாறினர். சப்ஸ்டிட்யூட் மாற்றத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் அணி ஆட்டத்தின் 82-ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த முறை அட்ரியன் ரபியட் அசிஸ்ட் வழங்க பிராட்லி பார்கோலா கோல் அடித்து அசத்தினார்.
மீண்டும் இரு அணிகள் தரப்பிலும் வீரர்கள் மாற்றம் தீவிரமாக நடந்தது. ஆட்டத்தின் இறுதியில் செனகெல் அணி தனது முதல் கோலை அடித்தது. லிமேன் டை வழங்கிய அசிஸ்ட்-இல் இப்ராகிம் பே கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் எம்பாப்பே தனது அணிக்கு மற்றொரு கோல் அடித்தார். இதனால் 3-1 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையை தக்கவைத்தது. ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.