

புதிய ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடுவதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கின் இணை நிறுவனர் மற்றும் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் செய்தியாளர்களிடம் எம்.எஸ்.தோனியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், உலகளவில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர். ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்றாலும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகும் அவருக்கு ஈடு இணையற்ற ரசிகர் பட்டாளம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த ETPL தொடர் ஐரோப்பாவில் வரும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரின் டப்ளின் கார்டியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக ராகுல் டிராவிட் இணைந்துள்ளார். மேலும் ஸ்டீவ் வாக், ஜாண்டி ரோட்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பிற அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.
பிசிசிஐ (BCCI) விதிகளின்படி, அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் விளைாடினால் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட அனுமதியில்லை. இதனால் இந்திய வீரர்கள் இல்லாதது பெரிய குறையே, இருப்பினும் உலகின் பிற முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுவதால் எவ்வித பாதிப்பும் இருக்காது என அவர் நம்பிக்கை வைத்துள்ளார்.
டி20 வடிவம் தற்போதைய தலைமுறைக்கு ஏற்றது. உள்ளூர் ஐரோப்பிய திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சர்வதேச ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாட வைப்பதே இத்தொடரின் முக்கிய நோக்கம்" என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.