

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
வங்கதேச அணியுடன் ஹராரேவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே 25 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே 36.4 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட். வங்கதேச பந்துவீச்சில் நஹித் ராணா 10 ஓவரில் 2 மெய்டன் உள்பட 21 ரன்னுக்கு 6 விக்கெட், தஸ்கின் 2, மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் 33.1 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 36.4 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகமாக நியூமேன் நியாம்ஹுரி 33 ரன்னும், ரிச்சர்ட் நகரவா 27 ரன்னும், இன்னசெண்ட் காலா 26 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் நஹித் ரானா 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வங்கதேசம் அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வங்கதேசம் 33.1 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே சார்பில் நகரவா, பிராட் எவன்ஸ் தலா 3 விக்கெட்டும், முசாராபானி, நியூமேன் நியாம்ஹுரி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூமேன் நியாம்ஹுரிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி ஹராரேயில் நடைபெற உள்ளது.