

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 499 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 549 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. லஹிரு உதரா சிறப்பாக விளையாடி188 ரன்கள் குவித்தார்.
சோனல் தினுஷா 92 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்து 84 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 69 ரன்னில் அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்சாரி ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், காவேம் ஹோட்ஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
5வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி 242 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 112 ரன்களில் அவுட்டானார்.
இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 499 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 50 ரன்கள் முன்னிலை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து 142 ரன்கள் முன்னிலை பெற்றது.
இறுதி நாளான இன்று ஆட்டம் டிராவை நோக்கிச் செல்லவே அதிகம் வாய்ப்புள்ளது.