

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வெர்மா ஜோடி சுமாரான தொடக்கத்தை கொடுத்தது. ஸ்மிருதி மந்தனா 13 ரன்களிலும், ஷபாலி வெர்மா 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 பந்துகளில் 36 ரன்களை அடித்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் அயபோகா காகா 3 விக்கெட்டுகளும், துமி செகுக்னே 2 விக்கெட்டுகளையும், நொன்குலுலெகோ லாபா 1 விக்கெட் கைப்பற்றினர்.
158 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் லாரா வொல்வார்ட் 39 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவருடன் களமிறங்கிய சூன் லஸ் 13 ரன்களும், அடுத்து வந்த டஸ்மின் ப்ரிட்ஸ் 10 ரன்களும் அடித்து அவுட் ஆகினர்.
அனெய்ரி டெர்க்சன் சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 44 ரன்களை குவித்தார் ஈடுபட்டார். இவருடன் ஆடிய ட்ரயோன் தன் பங்கிற்கு 18 ரன்களை சேர்த்தார். போட்டி முடிவில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ஸ்ரீ சராணி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.