Quinton de Kock | ஒரே சதம், பல சாதனைகளை படைத்த குவிண்டன் டி காக்

ஐ.பி.எல். தொடரில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
Quinton de Kock | ஒரே சதம், பல சாதனைகளை படைத்த குவிண்டன் டி காக்
Published on

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 24-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த ஹோம் கிரவுண்டில் வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. எவ்வித பரபரப்பும் இன்றி முடிந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்றதில் துவங்கி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பாக ஆடி ரன்குவித்தார். இதன் காரணமாகவே மும்பை அணி 195 ரன்களை குவிக்க முடிந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி வரை களத்தில் இருந்த குவிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 112 ரன்களை குவித்தார். 15 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், குவிண்டன் டி காக் தனது அணியை சரிவில் இருந்து மீட்டதோடு, ஐ.பி.எல். தொடரில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குவிண்டன் டி காக் ஐ.பி.எல். தொடர்களில் அதிகமுறை 50-க்கும் அதிக ரன்களை அடித்த முழு நேர விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 31 முறை அரைசதம் கடந்துள்ளார். மறுப்பக்கம் குவிண்டன் டி காக் 25 முறை அரைசதம் கடந்துள்ளார். எம்.எஸ். தோனி 24 முறை அரைசதம் அடித்துள்ளார்.

இதுதவிர மூன்று வெவ்வேறு ஐ.பி.எல். அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை குவிண்டன் டி காக் பெற்றுள்ளார். முன்னதாக கே.எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் என மூன்று அணிகளுக்காக சதம் அடித்துள்ளார். இதே போல் சஞ்சு சாம்சன் - டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக சதம் விளாசியுள்ளார்.

தற்போது இந்தப் பட்டியலில் முதல் வெளிநாட்டு வீரராக குவிண்டன் டி காக் இணைந்துள்ளார். இவர் இதுவரை டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக சதமடித்துள்ளார். இதுதவிர ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கராக டி காக்-இன் 112 இடம்பிடித்துள்ளது. முன்னதாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 109 ரன்களை அடித்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com