

ஐ.பி.எல். 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா தனித்துவமான சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்தார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் பாணிக்கு பெயர் பெற்ற பிரியான்ஷ், மிட்செல் ஸ்டார்க்கின் முதல் பந்தையே ஒரு பிரம்மாண்டமான சிக்ஸருக்கு விளாசி, இன்னிங்ஸை ஸ்டைலாகத் தொடங்கினார்.
ஒரு போட்டியின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசுவது ஆர்யாவுக்கு இது இரண்டாவது முறையாகும். இதற்கு முந்தைய நிகழ்வு, ஐ.பி.எல். 2025-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கலீல் அகமது பந்துவீச்சில் அவர் சிக்ஸர் அடித்தபோது நடந்தது. இதன் விளைவாக, ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் பந்தை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்த ஒரே பேட்டர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
நமன் ஓஜா , விராட் கோலி , பில் சால்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் இதை ஒரு முறை மட்டுமே செய்துள்ளனர். ஐ.பி.எல். தொடரின் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசுவது ஆர்யாவுக்கு இது மூன்றாவது முறையாகும் — இதன் மூலம், சாதனை படைத்த ஜெய்ஸ்வாலை (நான்கு) விட ஒன்று மட்டுமே பின்தங்கியுள்ளார்.
மேலும், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குப் பிறகு , பவர்பிளேக்குள் குறைந்தது மூன்று முறையாவது அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை விளாசி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.