

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 126 ரன்னில் அவுட்டானார். ஷாண்டோ 29 ரன்னும், தன்ஜித் ஹசன் தமிம் 26 ரன்னும், மொமினுல் ஹக் 22 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பாபர் அசாம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாபர் அசாம், சல்மான் ஆகா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் சஜித் கான் 3 சிக்சர்கள் விளாசி 38 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் தஜ்ஜுல் இஸ்லாம், நஹித் ரானா தலா 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.