

தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் நியூசிலாந்து 2 போட்டிகளிலும், தென்ஆப்பிரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன.
இந்த நிலையில் 4-வது போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கானர் எஸ்தர்ஹுசைன் 36 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசி தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜாமிசன் 2 விக்கெட்டும், ஜாக் பால்க்ஸ், பென் சீர்ஸ், மெக்கோன்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் ராபின்சன் 22 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். டேன் கிளெவர் 16 பந்தில் 26 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 18.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 145 ரன்களில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியில் ஜெரால்டு கோயட்சி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பார்ட்மேன், சுப்ராயன், கேஷவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.