

கார்டிப்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 72 ரன்னும், மலான் 54 ரன்னும், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் தலா 52 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் கான்வே பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
அவருக்கு டேரில் மிட்செல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரும் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், நியூசிலாந்து 45.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கான்வே 111 ரன்னும், மிட்செல் 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. டேவன் கான்வேக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.