

ஐ.பி.எல். 2026 டி20 தொடரின் 65-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நேற்று (புதன்கிழமை) இரவு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி, மும்பை இந்தியன்ஸ் அணியை 147/8 என்ற சுமாரான ஸ்கோருடன் கட்டுப்படுத்தியது.
இந்தப் போட்டியில், ஹர்திக் மீண்டும் கேப்டன் பதவிக்குத் திரும்பினார். இதன்மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மூன்று வெவ்வேறு கேப்டன்களை கொண்ட இரண்டாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் உருவெடுத்தது. சூர்யகுமார் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என கடந்த மூன்று போட்டிகளில் மும்பை அணியை மூன்று கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர்.
மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக முந்தைய போட்டிகளில் பங்கேற்கவில்லை. முன்னதாக புனே வாரியர்ஸ் இந்தியா அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மூன்று வெவ்வேறு கேப்டன்களை கொண்டிருந்தது - ராஸ் டெய்லர், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச்.
நேற்றைய போட்டியை பொருத்தவரை 148 எனும் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.