

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ ஆகியவை ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியதால் ஐதராபாத் (16 புள்ளிகள்) பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதோடு, குஜராத் டைட்டன்சும் (16 புள்ளிகள்) தகுதி பெற்றது.
பிளே ஆப் சுற்றுக்கு எஞ்சிய ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டியில் உள்ளன. 63 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 7 லீக் ஆட்டங்கள் எஞ்சி உள்ளன.
பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவை 23-ம் தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளை பெறும். மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொறுத்து பஞ்சாப்பின் தலைவிதி இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்சுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. 12 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்று லக்னோவையும், 24-ம் தேதி மும்பையையும் எதிர்கொள்கிறது. இதில் இரண்டிலும் வென்றால் 16 புள்ளியை தொட்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகளைப் பொறுத்து வாய்ப்பு அமையும்.
12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில் குஜராத்துடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். வென்றால் 14 புள்ளிகளைப் பெறும். மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
சென்னையை போலவே, டெல்லி கேப்பிடல்ஸ் 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது.
கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. 11 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி நாளை மும்பையையும், 24 -ம் தேதி டெல்லியையும் எதிர்கொள்கிறது. இதில் இரண்டிலும் வென்றால் 15 புள்ளிகளை பெறும். மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும். ஒன்றில் தோற்றால் வாய்ப்பை இழந்துவிடும்.