துக்கடா என்பது கெட்ட வார்த்தை அல்ல- மக்கள் நீதி மய்யத்தில் நான் கூட துக்கடா அரசியல்வாதி தான்: நடிகை ஸ்ரீபிரியா

பிரசாரத்திற்கு நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்காக தன் உயிரை கொடுத்துகூட சேவை செய்யக்கூடியவர் தான் கமல்ஹாசன்.
நடிகை ஸ்ரீபிரியா
நடிகை ஸ்ரீபிரியா
Published on

கோவை:

நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நடிகை ஸ்ரீபிரியா கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். கோவை மக்கள் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கமலின் வெற்றியில் நான் ஒரு அணிலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்காக இங்கு வந்து பிரசாரம் செய்தேன்.

பிரசாரத்திற்கு நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்காக தன் உயிரை கொடுத்துகூட சேவை செய்யக்கூடியவர் தான் கமல்ஹாசன்.

எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சி சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. மனிதர்களை, மனிதர்களாகவே நேசிக்கும் ஒரு கட்சி இருக்கும் என்றால் அது மக்கள் நீதி மய்யம் மட்டும் தான். பாரதீய ஜனதா சார்பில் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வானதி தன்னை பார்த்து மக்கள் நீதிமய்யம் துக்கடா என்று கூறி விட்டதாகவும், அவர்கள் பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க மாட்டோம். துக்கடா என்பது கெட்ட வார்த்தை அல்ல. மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் கூட துக்கடா அரசியல்வாதி தான். நடிகர் ராதாரவி கமல்ஹாசனுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரசாரம் செய்து வருகிறார். ராதாரவியின் பேச்சு கமலுக்கு வெற்றியை பெற்று கொடுக்கும். இதற்காக நாங்கள் பா.ஜனதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பிரசாரத்தின் போது மைக் வேலை செய்யவில்லை என டார்ச்லைட்டை கமல்ஹாசன் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பரவுகிறது. அது உண்மையல்ல. சித்தரிக்கப்பட்டது. வெட்டி ஒட்டப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com