

நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 10-வது இடங்களைப் பிடித்து வெளியேறின.
தர்மசாலாவில் இன்று நடைபெறும் குவாலிபையா்-1 (முதல் தகுதிச்சுற்று) ஆட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூரும், இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த மாதம் 24-ம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு 5 விக்கெட் வித்தியாசத்திலும், கடந்த 30-ம் தேதி அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
ஆர்.சி.பி. லீக் சுற்றில் 9 போட்டியில் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமபலத்துடன் திகழ்கிறது.
விராட் கோலி 1 சதம், 4 அரை சதத்துடன் 557 ரன் எடுத்துள்ளார். தேவ்தத் படிக்கல் 433 ரன், கேப்டன் ரஜத் படிதார் 393 ரன், டிம் டேவிட், வெங்கடேஷ் அய்யர், ஜிதேஷ் சர்மா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் முதுகெலும்பாக இருக்கிறார். 24 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். 23 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும். ரசிக் சலாம் 14 விக்கெட், ஹேசில்வுட் 12 விக்கெட், சுயாஷ் சர்மா 9 விக்கெட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். குருணால் பாண்ட்யா ஆல் ரவுண்டர் பணியில் (182 ரன், 11 விக்கெட்) சிறப்பாக செயல்படுகிறார்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பெங்களூருவை தோற்கடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.
ஆர்.சி.பி.யை போலவே குஜராத்தும் லீக் சுற்றில் 9 போட்டியில் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்சன் 638 ரன், கேப்டன் சுப்மன் கில் 616 ரன், பட்லர் 469, வாஷிங்டன் சுந்தர் 303 ரன் ஆகியோரும் , பந்துவீச்சில் ரபடா 24 விக்கெட், ரஷீத் கான் 19 விக்கெட், முகமது சிராஜ் 17 விக்கெட், ஜேசன் ஹோல்டர் 13 விக்கெட் ஆகியோரும் மிக நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.