

ஐ.பி.எல். தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 ரன்கள் எடுத்த நிலையில் நேந்த்ரே பர்கர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார்.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். மேத்யூ ஷார்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் மளமளவென இழந்ததால் சர்பராஸ் கானை இம்பேக்ட் சப் வீரராக களம் இறக்கியது. இவர் 12 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். கார்த்திக் சர்மா 18 ரன்கள் எடுத்து பிரிஜேஷ் சர்மா பந்தில் வெளியேறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் 100 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஜேமி ஓவர்டன் தாக்குப்பிடித்து விளையாடினார். இவரது ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசிய ஓவர்டன் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது ரன்அவுட் ஆனார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 127 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஓவர்டன் 36 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.