

ஐபிஎல் 2026 சீசன் லீக் போட்டிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. என்ற போதிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற 6 அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று ஆர்.சி.பி.- பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆர்.சி.பி., டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. ஆர்.சி.பி. 13 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒன்றில் முடிவு இல்லை மூலமாக 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த அணி முதல் 7 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த நிலையில், கடைசி 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற நிலை உருவாகியுள்ளது. கடைசி போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்ததால், 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அடுத்து லக்னோ, மும்பையுடன் விளையாட உள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றா் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் நேற்றைய வெற்றியின் மூலம் 13 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பு உள்ளதா? என காத்திருக்க வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளேஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது. என்றாலும், கடைசி போட்டியில் சி.எஸ்.கே.-வை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் உறுதி செய்யும். இல்லை என்றால் மற்ற அணிகளின் முடிவு மற்றும் ரன்ரேட்டிற்காக காத்திருக்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி., சிஎஸ்கே-வுக்கு எதிராக விளையாட உள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். சிஎஸ்கே-வை வீழ்த்தினால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து, சிஎஸ்கே-வை வெளியேற்றும். ஆர்சிபி தோல்வியடைந்தால் ஆர்சிபிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆர்சிபி ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிகளின் முடிவு மிக மிக முக்கியமானது. இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. இதில் சிஎஸ்கே தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்பை இழக்க வாய்ப்புள்ளது.