

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று நடக்கும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணிக்கு (4 வெற்றி, 8 தோல்வி) இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இருப்பினும் சீசனை முடிந்த வரை உயரிய நிலையில் முடிக்க தீவிரம் காட்டுகிறது. காயத்தால் அவதிப்படும் குயின்டான் டி காக், ராஜ் பவா எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளனர். முதுகுவலியால் கடந்த 3 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் ஹர் திக் பாண்ட்யா இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. இதே போல் குழந்தை பிறந்ததால் முந்தைய ஆட்டத்தில் ஒதுங்கிய சூர்யகுமார் யாதவ் அணியுடன் மீண்டும் இணைந்து விட்டார். மற்றபடி ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், திலக் வர்மா, நமன் திர், வில் ஜாக்ஸ் என நட்சத்திர பேட்ஸ்மேன்களோடு களம் காணுகிறது. மும்பை அணியினர் ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத் தாவை துவம்சம் செய்திருப்பதால், அவர்களை கூடுதல் நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள்.
அஜிங்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி (5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளி) எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' வாய்ப்பில் தொடர முடியும். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்றால் வெளியேற வேண்டியது தான். குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பின் ஆலென், அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் ஆகியோரது அரைசதத்தால் 247 ரன்கள் குவித்து கெத்து காட்டிய கொல்கத்தா அணி அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் சூழல் அவர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.