

ஐ.பி.எல். 2026-ன் 45-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 61 ரன்கள் விளாச, ஐதராபாத் ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்தது. பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 19 ஓவரில் 165 ரன்களில் எடுத்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 60 ரன்களுக்குள் இழந்தது.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் சுனில் நரைன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது. தொடக்க வீரர் பின் ஆலன் 13 பந்தில் 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ரகானே உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரகுவன்ஷி 39 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் கடைசி பந்தில் ரகானே 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி 5 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 17-வது ஓவரை ஷிவாங் குமார் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 59 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியாக 18.2 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.