

ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அதன்பிறகு டெல்லி, ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஆர்.சி.பி.யிடம் 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. முதல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. 2 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
ஹாட்ரிக் தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
சமீபத்திய போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து பின்தங்கி உள்ளோம். அதிகமான விக்கெட்டுகளை இழந்தும், எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததுமே இதற்கு முக்கிய காரணம். ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக தொடர்ந்து ரன்களை ஈடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பேட்டிங், பந்து வீச்சு என இரு பிரிவுகளிலும் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஆழமான மறு பரிசீலனை செய்து தேவையான உத்வேகத்தையும், வெற்றிக்கான பணியையும் எப்படி பெற வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.
அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு இருப்பதால் தற்போதைய உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய அணுகுமுறை பலனை தரவில்லை. புதிய உத்திகளை கடைபிடித்து அடுத்த போட்டிகளில் அமல்படுத்துவோம்.
ரூதர் போர்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவர் பேட்டிங் செய்யும் விதம் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்து உள்ளது. தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யக்கூடிய நம்பிக்கையும் தருகிறது.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் 5-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை வருகிற 16-ந்தேதி சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.