

குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்றும் வரும் 46-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. 8 போட்டிகளில் 5-ல் 200 ரன்களுக்கு மேல் குவித்ததுள்ளதால், இந்த போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து டார்கெட் நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே முகமது சிராஜ் அதிர்ச்சி அளித்தார். 2-வது பந்தில் பிரியான்ஷ் ஆர்யா (2), 3-வது பந்தில் கூப்பர் கொனோலி (0) ஆகியோரை வீழ்த்தினார். அதன்பின் பின் பஞ்சாப் அணியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 6-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங்கை (15) ரபாடா வீழ்த்தினார். இதனால் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
நேஹல் வதேரா (0), ஷ்ரேயாஸ் அய்யரை (19) அடுத்தடுத்து ஹோல்டர் வீழ்த்தினார். இதனால் 47 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தத்தளித்தது. அடுத்து வந்த சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14-வது ஓவரை மனவ் சுதர் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி விளாசினார் ஷெட்ஜ். அத்துடன் 24 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் 16 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவர் ஹோல்டர் ஸ்டோய்னிஸ் மற்றும் பார்ட்லெட்டை வீழ்த்தினார். அவர் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
மார்கோ யான்சன் 11 பந்தில் 20 ரன்கள் அடிக்க, இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
முகமது சிராஜ், ரபாடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.