

ஐ.பி.எல். 2026 தொடரில் 230 ரன்கள் அடித்தால் கூட பாதுகாப்பானது அல்ல என்ற நிலை உள்ளது. பெரும்பாலான போட்டிகள் ஹை-ஸ்கோர் மேட்சாக இருந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 250 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதாக எட்டியுள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 220 ரன்களுக்கு அதிகமான இலக்கை டெல்லி எட்டியுள்ளது. பந்து வீச்சாளர்களின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் பேட்டர்களை வீழ்த்த பந்து வீச்சாளர்களுக்கு ஆக்ரோஷம் தேவை என பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெர்குசன் கூறியதாவது:-
இங்கே விளையாடப்படும் கிரிக்கெட் பாணியில், IPL என்பது தனக்கென தனித்துவமான ஒரு புதிய போட்டியாகவே திகழ்கிறது. உண்மையிலேயே அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கிறது. ஆகவே, பவுலராக இருக்கும்போது பவுண்டரிகள் அடிக்கப்படுவதை நீங்கள் சந்திக்கத்தான் நேரிடும். அது பவுலராக இருப்பதன் ஒரு பகுதி.
இதில் இருந்து எப்படி மீண்டு வந்து மீண்டும் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியது. ஆகவே, ரன்களை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க முயற்சிப்பதற்கு, பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் ஆக்ரோஷம் தேவை. இல்லை என்றால், பேட்டர்கள் நல்ல மனநிலையில் (அடித்து விளையாட வேண்டும்) இருந்து கொண்டிருப்பார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதலாக கொஞ்சம் வேகத்தை அதிகரித்தால் அது பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் வேகமாக பந்து வீசினால், பந்து வேகமாக பவுண்டரி லைனை தொடும். நீங்கள் கூடுதலாக வேகத்தை அதிகரிக்கும்போது, பேட்ஸ்மேன் ரியாக்ட் செய்வதற்கு குறைந்த நேரமே கிடைக்கும். இது போட்டியின் முக்கிய காரணி.
மேலும், இன்றைய காலத்து ஒவ்வொரு கிரிக்கெட் வீரரிடமும் பல்வேறு உத்திகள் (variables) உள்ளன. அவர்கள் பந்தின் வேகத்தை மாற்றியமைக்கிறார்கள். பந்து வீச்சில் பலவிதமான மாற்றங்களைக் கையாளுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
எனவே, குறிப்பிட்ட நாளில் எது சிறப்பாகப் பலனளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்வதும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதும்தான் இதில் முக்கியமானது.
இவ்வாறு பெர்குசன் தெரிவித்துள்ளார்.