பேட்டிங் நம்பிக்கையும் போச்சா., காயத்தால் ஆயுஷ் மாத்ரே அவதி- சி.எஸ்.கே.-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு | IPL 2026

ஆயுஷ் மாத்ரேவுக்கு நேற்றைய போட்டியின்போது தொடையின் பின்பகுதி தசைநாரில் கிழிவு ஏற்பட்டு வழியால் அவதிப்பட்டார்.
பேட்டிங் நம்பிக்கையும் போச்சா., காயத்தால் ஆயுஷ் மாத்ரே அவதி- சி.எஸ்.கே.-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு | IPL 2026
Published on

ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரேவின் தொடை பின்பகுதி தசைநாரில் (hamstring) கிழிவு ஏற்பட்டது. இந்தக் காயம் மிகவும் மோசமாக தெரிவதாக கூறப்படுகிறது. இது சென்னை அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நேற்றைய போட்டியில் இரண்டு ரன்கள் ஓட முயன்றபோது மிகுந்த வலியால் அவதிப்பட்டு தனது தொடைப் பின் பகுதியை பிடித்துக்கொண்டார். இதனால் அவருக்கு களத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் 13 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் மாத்ரே காயம் குறித்து பயிற்சியாளர் மைக் ஹசி கூறியதாவது:-

இது நிச்சயமாக தொடை தசைநார் கிழிவுதான் (Hamstring). காயத்தின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. அநேகமாக நாளை (நேற்று அளித்த பேட்டி) அல்லது நாளை மறுநாள் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அவர் குணமடைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து, தொடை தசைநார் கிழிவு குணமடைய ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த காயம் மிகவும் மோசமாக தெரிகிறது. மாத்ரே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக இருப்பார். ஏனெனில், கடந்த சில போட்டிகளாக அவர் மிகச் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார்.

அவர் ஒரு மிகச் சிறந்த இளம் திறமையாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தக் காயம் அணியில் உள்ள வேறொருவருக்கு விளையாடும் வாய்ப்பை வழங்கப்போகிறது. எனவே, அதுவும் ஒரு வகையில் உற்சாகமளிப்பதாகவே உள்ளது. எங்கள் அணியில் மிகச் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அந்த வீரர்களில் ஒருவருக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கப்போவது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.

ஆகவே, ஆயுஷ் மாத்ரே அணியிலிருந்து விலகியிருப்பது (எத்தனை காலத்திற்கு என்று தெரியவில்லை என்றாலும்) எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அவருக்குப் பதிலாக ஒரு புதிய வீரர் அணிக்குள் வந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவது உற்சாகமளிப்பதாக உள்ளது.

இவ்வாறு மைக் ஹசி தெரிவித்தார்.

இந்த சீசனில் சென்னை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழும் மாத்ரே, 177.87 என்ற ஈர்க்கக்கூடிய ஸ்ட்ரைக் ரேட்டில் 201 ரன்களைக் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com