

11-வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பஞ்சாப்பிடம் மீண்டும் தோற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது.
144 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி டெர்வில்ஸ் 4 ரன்னில் தோற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை போராடியது பலன் அளிக்கவில்லை. அவர் 45 பந்தில் 57 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை, ராஜ்புத், முஜிபுர் ரகுமான் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
டெல்லி அணி சந்தித்த 5-வது தோல்வியாகும். பஞ்சாப்பிடம் ஏற்கனவே 6 விக்கெட்டில் தோற்றுள்ளது. தற்போது மீண்டும் தோற்றுள்ளது. இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்கள் மீது கேப்டன் காம்பீர் பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழந்ததால் வெற்றி பெறுவது கடினம்தான். ரன்களை எடுக்கும் போதே அதிகமான விக்கெட்டை இழந்து விட்டோம். எங்களை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி பஞ்சாப்பை 143 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் ஏமாற்றம் அளித்தனர்.
பிரித்வி ஷாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் அஸ்வின் கூறுகையில், இந்த போட்டியிலும் வென்றது மகிழ்ச்சி. எல்லோரும் ஆலோசித்து தான் கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தோம். ஆண்ட்ரூ டை நன்றாக வீசினார். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக நினைத்தோம். இதனால் புதிய முயற்சியாக கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தோம். டெல்லி அணி வீரர்கள் அழுத்தம் காரணமாக அடித்து ஆட நினைத்தார்கள். அது எங்களுக்கு விக்கெட்டாக மாறியது.