

ஐ.பி.எல். லீக் 2026 சீசனில் முக்கால்வாசி போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று மதியம் பிளேஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ அறிவித்தது.
பொதுவாக கடந்த சீசனில் சாம்பியன் பெற்ற அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு பிளேஆஃப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடத்தப்படும். அந்த வகையில் கடந்த வருடம் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதனால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் ஒரு பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் முடிவு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்கும்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத், 5 லீக் மற்றும் பிளேஆஃப் போட்டி ஒன்று, இறுதிப் போட்டி என ஏழு போட்டிகளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தற்போது மற்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பது தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் பிசிசிஐ-யுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் என அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மாநில சங்கம் மற்றும் அதிகாரிகளிடமிருந்து முன்வைக்கப்பட்ட, BCCI-யின் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின் வரம்பிற்கு அப்பாற்பட்ட சில கோரிக்கைகளின் காரணமாகவே இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.