

புதுடெல்லி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிகப்பட்டு மோதுகின்றன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பற்கு 210 ரன்கள் எடுத்தது.
பின்னர் 211 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் மில்லர்- விப்ராஜ் ' நிகம் கூட்டணி 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடைசி ஓவரில் 13 ரன் தேவையாக இருந்தது.
பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் 3 பந்தில் 5 ரன் வழங்கி விப்ராஜ் நிகமின் (12 ரன்) விக்கெட்டை சாய்த்தார். 4-வது பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அதை சிக்சருக்கு தூக்கினார். இதனால் 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர். பின்னர் 5-வது பந்தை எதிர்கொண்ட மில்லர் அந்த பந்தை பீல்டருக்கு நேராக அடித்தார்.
அவர் நினைத்திருந்தால் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்திருக்கலாம். ஆனால் மில்லர் ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. இறுதி பந்தை டேவிட் மில்லரால் (41 ரன், நாட்-அவுட்) அடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஒரு ரன்னுக்கு ஓடிய போது எதிர்முனையில் நின்ற குல்தீப் யாதவ் (1 ரன்) ரன் அவுட் செய்யப்பட்டார்.
டேவிட் மில்லர் ஓவரின் 5-வது பந்தில் ரன் எடுத்திருந்தால், ஒருவேளை குல்தீப் யாதவ் கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை என்றாலும் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். டெல்லி அணியின் கையில் இருந்த வெற்றி நழுவியுள்ளது.
போட்டிக்கு பின்னர் கண்கலங்கியபடி வந்த மில்லரை டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். மேலும் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமிலும் டேவிட் மில்லர் மிகுந்த சோகத்துடன் இருந்தார். அவரை பயிற்சியாளர் பதானி கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.