IPL 2026 | ஐபிஎல் ஒளிபரப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய வங்கதேசம்

வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.
IPL 2026 | ஐபிஎல் ஒளிபரப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய வங்கதேசம்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்போதைய வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதித்திருந்தது.

தற்போது வங்கதேசத்தின் புதிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜாகிர் உதீன் ஸ்வாபன், முந்தைய அரசின் இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது:-

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதில் எந்த தடையும் இல்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட சேனல்கள் தாராளமாகப் போட்டிகளை ஒளிபரப்பலாம். விளையாட்டையும் அரசியலையும் கலக்க விரும்பவில்லை. உள்ளூர் சேனல்கள் விண்ணப்பித்தால் வணிக ரீதியாக அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய அரசின் இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு உறவுகளைச் சீரமைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இடைக்கால அரசாங்கத்தின் போது ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் உச்சகட்டமாக, 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்தும் வங்கதேசம் விலகியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com