IPL 2026 | பிளே ஆப் சுற்றில் நுழைய 6 அணிகள் இடையே கடும் போட்டி

மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன.
IPL 2026 | பிளே ஆப் சுற்றில் நுழைய 6 அணிகள் இடையே கடும் போட்டி
Published on

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணிகளும் 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். நேற்றுடன் 58 போட்டிகள் முடிந்துள்ளன. இன்னும் 12 ஆட்டங்கள் மீதமுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன.

இவை தவிர மற்ற 8 அணிகள் போட்டியில் உள்ளன. இதுவரை எந்த அணியும் அதிகாரபூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் உள்ளன.

இரு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதிகாரபூர்வமாக தகுதிபெறும். பெங்களூரு அணி பஞ்சாப், ஐதராபாத்துடனும், குஜராத் அணி கொல்கத்தா, சென்னையுடனும் மோத வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3- வது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கும் இன்னும் 2 போட்டிகள் உள்ளது. 13 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் எஞ்சிய 2 போட்டியிலும் வெல்ல வேண்டும்.

ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி லக்னோ (இன்று), ஐதராபாத் (18-ம் தேதி), குஜராத் (21-ம் தேதி) ஆகியவற்றுடன் மோதவேண்டும். இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒன்றில் தோல்வியை தழுவினால் மற்ற அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

சி.எஸ். கே.வை போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் இருக்கிறது. அந்த அணி டெல்லி, லக்னோ, மும்பையுடன் ஆடவேண்டும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 புள்ளிகளுடன் 7- வது இடத்திலும் (எஞ்சிய ஆட்டம் 2), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 9 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் (எஞ்சிய ஆட்டம் 3 ) உள்ளன.

இரு அணிகளுக்கும் மிக மிக குறைவான வாய்ப்பே இருக்கின்றன. 4 இடங்களுக்கு 6 அணிகள் கடுமையான போட்டியில் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com