

பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், உடை மாற்றும் அறையில் இருந்த கேப்டன் ரியான் பராக், இ-சிகரெட்டை புகைத்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 16வது ஓவரில் இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, சக வீரர்களான துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வீரர்களின் முன்னிலையில், கேப்டன் ரியான் பராக் சர்வ சாதரணமாக உட்கார்ந்துகொண்டு இ-சிகரெட்டை புகைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
உடை மாற்றும் அறை மற்றும் விளையாட்டு மைதான வளாகத்தின் எந்த ஒரு பகுதியிலும் புகை பிடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு சிகரெட்டுகள் தடை சட்டம் 2019இல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இ-சிகரெட்டை ரியான் பராக் புகைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இ-சிகரெட்டை தயாரித்தல், விற்பனை செய்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட செயல்களுக்கு, மின்னணு சிகரெட்டுகள் தடை சட்டம் இந்தியாவில் தடை விதித்துள்ளது. மேலும் இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் அபராதத் தொகையும், சிறை தண்டனையும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்கிறது.
வணிக நிறுவனங்கள் முதல் சாதாரண பெட்டிக் கடைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் சிகரெட்டுகளை போல் அல்லாமல், இந்த இ-சிகரெட்டின் சிறிய அடைப்பானில் நிகோடின், கஞ்சா உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களையும் உள்ளே செலுத்தி புகைக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அவர்கள் எதை புகைக்கிறார்கள் என்றெ தெரியாது. இந்த காரணத்தின் அடிப்படையில்தான், இ-சிகரெட் பயன்பாட்டிற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிதல்ல. ஏற்கனெவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், டக்-அவுட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போனை பயன்படுத்தியதை தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகம் ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்நிலையில், குறிப்பாக உச்சத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் மீதும், சட்டத்தை மீறிய கேப்டன் ரியான் பராக் மீதும் உரிய நடவடிக்கையை பிசிசிஐ எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.