

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர். அடுத்து வந்த இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.
இவருடன் ஆடிய கிளாசன் 24 பந்துகளில் 51 ரன்களும் அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 12 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் ரசிக் சலாம் 2 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா மற்றும் க்ரூணல் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
256 எனும் கடின இலக்கை துரத்திய ஆர்.சி.பி. அணிக்கு வெங்கடேஷ் அய்யர் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 44 மற்றும் 15 ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த படிக்கல் 21 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 39 பந்துகளில் 56 ரன்களும், இவருடன் ஆடிய க்ரூணால் பாண்டியா 31 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். டிம் டேவிட் 7 பந்துகளில் 15 ரன்களை சேர்க்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் சார்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், சகிப் ஹொசைன் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.