

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் தோல்வியை நேற்றிரவு நடந்த போட்டியில் எதிர்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 222 ரன்களை குவித்த போதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் தோல்வி குறித்து போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 222 என்பது சிறந்த ஸ்கோர் என்றே நினைப்பதாக தெரிவித்தார். மேலும், அவர் ராஜஸ்தான் வீரர்கள் அபாரமாக ஆடியதாக பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அய்யர், "222 ரன்கள் ஒரு மிக சிறந்த ஸ்கோர் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு அசாதாரணமான போட்டி, குறிப்பாக விக்கெட் சற்று ஒட்டும் தன்மையுடனும் மெதுவாகவும் இருந்தது. நாங்கள் மெதுவாகவும் யார்க்கர் பந்துகளையும் வீசத் திட்டமிட்டிருந்தோம். அதில் நாங்கள் சொதப்பிவிட்டோம்.
மேலும், அவர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள். தூபே மற்றும் ஃபெரராவின் அந்த பார்ட்னர்ஷிப். இது பல வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மாற்றியிருக்கும் ஒரு வடிவம். பந்துவீச்சாளர்கள் திட்டங்களுடன் வருவது ஒரு பெரிய சவால். ஆனால் இறுதியில், அது செயல்படுத்துவதை பொறுத்தது. இன்று எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. நாங்கள் உறுதியாக இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்," என்றார்.