

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 13-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் கொடுத்தனர். சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.
போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெயஸ்வால் அதிகபட்சமாக 32 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். மும்பை சார்பில் கஸன்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 11 ஓவர்களில் 151 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரியான் ரிக்கிள்டன் மற்றும் ரோகித் சர்மா முறையே 8 மற்றும் 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
பிறகு களமிறங்கியவர்களில் திலக் வர்மா (14), ஹர்திக் பாண்டியா (9) ரன்களில் நடையை கட்டினர். பிறகு களமிறங்கிய ரூதர்ஃபோர்டு 8 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்சர்களை எடுத்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய நமன் திர் 13 பந்தகளில் 25 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார். மற்ற வீரர்கள் ரன்குவிக்க தடுமாரினர்.
போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா, நேன்ட்ரி பர்கர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் துஷார் தேஷ்பான்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.