IPL 2026 | பெங்களூரு - லக்னோ அணிகள் இன்று மோதல்

பெங்களூரு அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த அணி அனைத்து ஆட்டங்களிலும் 200 ரன்னை எளிதாக கடந்துள்ளது.
IPL 2026 | பெங்களூரு - லக்னோ அணிகள் இன்று மோதல்
Published on

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு உள்ளூரில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், 43 ரன் வித்தியாசத்தில் சென்னையையும் அதட்டியது. அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பணிந்தது. முந்தைய ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

பெங்களூரு அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த அணி அனைத்து ஆட்டங்களிலும் 200 ரன்னை எளிதாக கடந்துள்ளது. சென்னைக்கு எதிரான அதிகபட்சமாக 250 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. பேட்டிங்கில் ரஜத் படிதார், விராட் கோலி, டிம் டேவிட், பில் சால்ட், தேவ்தத் படிக்கல் அதிரடியில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் ஜேக்கப் டப்பி, குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் இருந்து திடீரென ஒதுங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார் என்று தெரிகிறது.

லக்னோ அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோற்ற அந்த அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை பதம் பார்த்தது. கடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வியை தழுவியது.

லக்னோ அணியில் பேட்டிங்கில் மார்க்ரம், கேப்டன் ரிஷப் பண்ட், முகுல் சவுத்ரி, ஆயுஷ் பதோனி, மிட்செல் மார்ஷ், அப் துல் சமாத் என நீண்ட வரிசை இருந்தாலும் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிலைத்து நிற்பதில்லை. வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ், முகமது ஷமி, ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி நம்பிக்கை அளிக்கின்றனர்.

மொத்தத்தில் தங்களது உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும், சறுக்கலில் இருந்து மீண்டு வர லக்னோ அணியும் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 4-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி கண்டுள்ளன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com