

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் சி.எஸ்.கே. அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் முதல்முறையாக சி.எஸ்.கே. அணி பத்தாவது இடத்துடன் நிறைவு செய்தது. இந்த வரிசையில் 2026 சீசனை தொடங்கிய நிலையிலும், சி.எஸ்.கே. அணி வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறது.
நேற்று (ஏப்ரல் 05) இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு எதிரான போட்டியிலும் சி.எஸ்.கே. அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சி.எஸ்.கே. அணியின் சுமாரான பந்துவீச்சு காரணமாக முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 250 ரன்களை குவித்தது. பிறகு 251 எனும் இமாலய இலக்கை துரத்திய சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 43 ரன்களில் தோல்வியை தழுவியது.
போட்டி குறித்து பேசிய சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "பேட்டிங்கில் நாங்கள் எடுத்த தொடக்கத்திற்கு பிறகும் 200 ரன்களை கடந்து குவித்தது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. எங்கள் அணியில் சர்ஃபராஸ் கான், ஓவர்டன் மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோர் சிறப்பான ஆடி ரன்களை குவித்தனர். நான் மட்டும் பேட்டிங்கில் பங்களித்து இருந்தால் நிச்சயம் இந்தப் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும்.
இந்தப் போட்டியில் தோல்விக்கு நிச்சயம் நான் தான் காரணம். பந்துவீச்சின் போது டிம் டேவிட் விக்கெட்டை நாங்கள் கிட்டத்தட்ட எடுத்துவிட்டோம், ஆனால் அது விதிகளுக்கு மீறிய பந்தாக மாறியது. அதன்பிறகு அவர் மைதானத்தின் நான்கு பக்கமும் பந்துகளை பறக்கவிட்டார். உண்மையில், அவருக்கு வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்கிறேன்," என்றார்.