

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ரம் 11 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 28 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசிய நிலையில், அப்துல் சமத் 25 பந்துகளில் 36 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தா்ா. கடைசியில் களமிறங்கிய முகுல் சவுத்ரி 14 ரன்களும், ஷபாஸ் அகமது 15 ரன்களையும் அடிக்க லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் கைப்பற்றினார்.
எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரான பதும் நிசங்கா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 15 ரன்களிலும், கேப்டன் அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், சமீர் ரிஸ்வி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கவனமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். போட்டி முடிவில் டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது.