

ஐ.பி.எல். 2026-ன் 68-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்த 196 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க வீரர் குல்கர்னி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஜோஷ் இங்க்லிஸ் அபாரமாக விளையாடி 44 பந்தில் 72 ரன்கள் விளாசினார். ஆயுஷ் படோனி 18 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.
பஞ்சாப் அணி சார்பில் மார்கோ யான்சன், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக இறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ரன் ஏதுமின்றி அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங், அதிரடியாக ஆடி களத்தில் நின்றார். அவருடன் ஜோடி சேர்ந்த கூப்பர் கானலி 18 ரன்களில் போல்ட் ஆனார்.
பிரப்சிம்ரன் சிங் 21 ரன்கள் ஜஸ்ட் மிஸ்ஸில் அவுட் ஆகாமல் தப்பவே, அவரை அதன்பின் வீழ்த்த முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர்.
மறுபுறம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக அரைசதம் கடந்தார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது.
இந்த வெற்றிமூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ், தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.