

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 15-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரரும், கேப்டனுமான அஜின்கியா ரஹானே 24 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய ஃபின் ஆலென் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து ஆடிய ஆங்ரிஷ் ரகுவன்ஷி 33 பந்துகளில் 45 ரன்கள் (5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார்.
கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்), ரோவ்மேன் பொவெல் 24 பந்துகளில் 39 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய லக்னோ அணி சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் (15), ஏய்டன் மார்க்ரம் (22) ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்ற அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 34 பந்துகளில் 54 ரன்கள் (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார்.
தொடர்ந்து களமிறங்கிய முகுல் சவுத்ரி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதன்படி கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த ஓவரில் 2 சிக்சர்கள் விளாசிய முகுல் சவுத்ரி, கடைசி பந்தில் ஒரு ரன் ஓடி லக்னோ அணி வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டி முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய லக்னோ அணியின் முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 54 ரன்கள் (2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார்.