

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு (ஏப்ரல் 16) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்களை அடித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றார். மேலும், அவர் சிறப்பாக ஆடிய பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனிநபர்கள், குழுக்கள் அல்லது திட்டமிடல் என எதில் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைத் திரும்பிப் பார்த்து, அதைச் சரிசெய்ய வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பாராட்டுக்கள். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருந்தது, ஆனாலும் அவர்கள் எங்களை வீழ்த்திவிட்டார்கள். அவர்கள் சிறப்பாகப் பந்துவீசியும், ஃபீல்டிங் செய்தும் அசத்தினர். நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமா அல்லது தொடர்ந்து விளையாடி நிலைமையை மாற்ற வேண்டுமா என்பதைப் பார்க்க வேண்டும். பொறுப்பை ஏற்க வேண்டும்," என்றார்.