

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14-ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்களை விளாசியது.
211 ரன்களை துரத்திய டெல்லி அணி போட்டி முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. கடைசி பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் போட்டியில் வெற்றி கோட்டை தாண்டியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமக்கு வெற்றிபெற ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். நாங்கள் யார்க்கர் பந்து வீசுவதா அல்லது மெதுவான பந்து வீசுவதா என்பது பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒருவேளை மெதுவான பந்தை சிறப்பாக வீசினால், அதை பவுண்டரிக்கு அடிப்பது கடினமாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் நிச்சயமாக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
210 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சராசரிக்கும் 10-15 ரன்கள் அதிகம் என்றே நாங்கள் எப்போதும் கருதினோம். நாங்கள் பேட்டிங் செய்தபோதுகூட, போட்டியின் இறுதி ஓவர்களில் பெரிய பவுண்டரிகளை அடிப்பது எளிதாக இருக்கவில்லை.
ஆடுகளத்தின் மந்தமான தன்மையே அதற்குக் காரணம். எனவே, நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினால், இந்தப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியும் என்று நாங்கள் நினைத்தோம்," என்று கில் கூறினார்.