

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கத்திற்கு மாறாக ரன்குவிப்பில் வேகத்தை குறைத்து ஆடினார். இருந்த போதிலும், ஆட்டத்தின் கடைசி ஓவர்கள் வரை நிலைத்து நின்ற வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்களை விளாசி தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் சூர்யவன்ஷி தவிர்த்து ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்களும், ஃபெரரியா 11 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 215 ரன்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 167 ரன்கள் சேர்த்த நிலையில், சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 53 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
போட்டி முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆர்ச்சர், நேன்ட்ரே பர்கெர் மற்றும் ப்ரிஜேஷ் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல். 2026 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது.