

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 55-ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. தரம்சாலா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ப்ரியான்ஷ் ஆர்யா நல்ல துவக்கம் கொடுத்தார். இவர் 33 பந்துகளில் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 36 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். கூப்பர் கொனொலி 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது.
டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், மாதவ் திவாரி தலா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 211 ரன்களை துரத்திய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
பின்னர் கேப்டன் அக்சர் படேல் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர் 30 பந்துகளில் 56 ரன்களையும், இவருடன் ஆடிய டேவிட் மில்லர் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். இறுதியில் அஷூடோஷ் சர்மா 24 ரன்களையும், மாதவ் திவாரி மற்றும் ஆகிப் நபி முறையே 18 மற்றும் 10 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது.