

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (டெல்லி, கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு, ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக) அல்லோல்படுகிறது. கடந்த ஆட்டத்தில் சொந்த ஊரில் 158 ரன்களே எடுத்த சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.
சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. அந்த அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனையே மலைபோல் நம்பி இருக்கிறது. அவர் அதிக ரன் குவித்த 3 ஆட்டங்களில் (115, 48 மற்றும் 101 ரன்) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் (178), சர்ப்ராஸ் கான் (161), ஷிவம் துபே (150), டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் முக்கியமான இந்த ஆட்டத்தில் கைகொடுக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் அன்ஷூல் கம்போஜ் (14 விக் கெட்). ஜாமி ஓவர்டான், நூர் அகமது, அகீல் ஹூசைன் நம்பிக்கை அளிக்கின்றனர்.
தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்டு வரும் டோனி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்று உறுதியாக கூற முடியாது என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நேற்று தெரிவித்தார். அத்துடன் உடல் தகுதியில் முன்னேற்றம் கண்டு வரும் அவர் ஒரு ஆட்டத்திற்கு பிறகு களம் திரும்புவார் என்று நம்புவதாக கூறினார்.
மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 6 தோல்விகளுடன் (டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக) 9-வது இடத்தில் தவிக்கிறது. அந்த அணி முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. சென்னை அணிக்கு எதிராக 208 ரன் இலக்கை விரட்டுகையில் 104 ரன்னில் அடங்கியும். ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 243 ரன்கள் குவித்தும் அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இன்றைய மோதல் அந்த அணிக்கு வாழ்வா-சாவா? போராட்டமாகும் இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விடும்.
நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை அணி பேட்டிங்கில் ஓரளவு ஏற்றம் கண்டாலும். பந்து வீச்சில் மிகவும் பலவீனமாக இருப்பது பெருத்த பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங்கில் ரையான் ரிக்கெல்டன் (ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 260 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சொதப்புகிறார்கள். காணாக்குறைக்கு ரோகித் சர்மா தசைப்பிடிப்பு பாதிப்பால் விளையாட முடியாமல் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா என்பது குறித்து உறுதியில்லை. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் கசன்பார் (10 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட். ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பும்ரா 30 ஓவர்கள் பந்து வீசி 264 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 25 ஓவருக்கு மேல் வீசிய ஒரு பவுலரின் மோசமான செயல்பாடாக இது அமைந்துள்ளது.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது குறித்து உடல் தகுதி சோதனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் தான் எங்கள் அணி எழுச்சி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்களது பலவீனங்களை சரிசெய்து சரிவில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். அதேநேரத்தில் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த சென்னை அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவதுடன், உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்தி புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முழுமுயற்சி மேற்கொள்ளும். சமபலம் வாய்ந்த அணிகள் சந்திக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 40 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பை யும், 19-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை மோதியதில் அதிலும் மும்பையின் கையே சற்று ஓங்கி (5-4) நிற்கிறது.