413 இலக்கை நெருங்கி வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய பெண்கள் அணி..!

ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார். ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
413 இலக்கை நெருங்கி வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய பெண்கள் அணி..!
Published on

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com