டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மூத்த வீரர் கோபிநாத் மரணம்

இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், உலக அளவில் 2-வது சீனியர் வீரராகவும் விளங்கிய தமிழகத்தை சேர்ந்த சி.டி.கோபிநாத் (வயது 96) வயது மூப்பு பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மூத்த வீரர் கோபிநாத் மரணம்
Published on

சென்னை:

இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், உலக அளவில் 2-வது சீனியர் வீரராகவும் விளங்கிய தமிழகத்தை சேர்ந்த சி.டி.கோபிநாத் (வயது 96) வயது மூப்பு பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். 1951 முதல் 1960-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணிக்காக 8 போட்டிகளில் ஆடிய அவர் ஒரு அரைசதம் உள்பட 242 ரன்கள் எடுத்தார்.

முதல் தர கிரிக்கெட்டில் 83 ஆட்டங்களில் விளையாடி 9 சதம், 23 அரைசதம் உள்பட 4,259 ரன்கள் சேர்த்தார். 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இது தான். அந்த வரலாற்று சிறப்புமிக்க இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய வீரர்களில் உயிரோடு இருந்த கடைசி வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபிநாத் மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. கோபிநாத் மரணத்தை தொடர்ந்து தற்போது இந்தியாவில் வாழும் அதிக வயது டெஸ்ட் வீரராக மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பதான்கர் (வயது 95) உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com