

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பேட்டிங்கில் அசத்த, இந்தியா நெதர்லாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.
இந்திய அணிக்கு தொடக்க பேட்டர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா (47 பந்துகளில் 74 ரன்கள்) மற்றும் ஷபாலி வர்மா (38 பந்துகளில் 55 ரன்கள்) நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்துது. இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 என்ற ஸ்கோரை எட்டியது.
இது இந்த தொடரின் வரலாற்றில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். உண்மையில், மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த இங்கிலாந்து அணிக்கு அடுத்து இரண்டாவது அணி இந்தியா ஆகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை-அதிக ரன்களை எடுத்த அணிகள்:
219/1 - இங்கிலாந்து மகளிர் அணி vs இலங்கை மகளிர் அணி, எட்ஜ்பாஸ்டன், 2026
213/5 - இங்கிலாந்து மகளிர் அணி vs பாகிஸ்தான் மகளிர் அணி, கேப் டவுன், 2023
209/5 - இந்திய மகளிர் அணி vs நெதர்லாந்து மகளிர் அணி, ஹெடிங்லி, 2026
195/3 - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி vs தாய்லாந்து மகளிர் அணி, கான்பெரா, 2020
194/5 - இந்திய மகளிர் அணி vs நியூசிலாந்து மகளிர் அணி, பிராவிடன்ஸ், 2018
போட்டியை பொருத்தவரை 210 ரன்களை துரத்திய நெதர்லாந்து மகளிர் அணி 17.3 ஓவர்களில் 114 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய மகளிர் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.