

அகமதாபாத்தில் நடைபெற்ற தனது வாரிய கூட்டங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியம், தனது உறுப்பினர் கடமைகளை கடுமையாக மீறியதன் காரணமாக, கிரிக்கெட் கனடாவை ஐ.சி.சி. உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்தது.
இந்தக் கூட்டத்தின் போது, நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மகளிர் கிரிக்கெட்டை ஆதரித்தல், உலகளாவிய போட்டி கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் விளையாட்டில் புதுமைகளை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்ட தொடர் முடிவுகளையும் ஐ.சி.சி. அறிவித்தது.
இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட செய்தி குறிப்பின் படி, கனடிய வீரர்களின் நலன்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், தேசிய நிர்வாக அமைப்பை பாதிக்கும் நிர்வாக சிக்கல்களால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும் ஐ.சி.சி. வாரியம் கருத்தில் கொண்டுள்ளது. அதன்படி, இடைநீக்க காலத்திலும் கனடிய தேசிய பிரதிநிதிகள் அணிகள் ஐ.சி.சி. நிகழ்வுகளில் பங்கேற்க தொடர்ந்து தகுதிபெறும்.
இருப்பினும், கிரிக்கெட் கனடா, ஐ.சி.சி. நிர்வாகத்தின் மேற்பார்வையின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தேசிய அணி திட்டங்களுக்கு மட்டுமே, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிதி வழங்கும் வழிமுறையின் மூலம் ஐ.சி.சி. நிதியை பெற அனுமதிக்கப்படும்.
வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட ஆளுகை மற்றும் நிர்வாக சிக்கல்களை தீர்க்கும் நோக்கில், உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குவதற்கான சில நிபந்தனைகளையும் ஐ.சி.சி., கிரிக்கெட் கனடாவிற்கு வழங்கும். நிபந்தனைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதில் வாரியம் திருப்தி அடைந்தால் உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படும்.