

இந்திய மகளிர் அணியின் தீப்தி சர்மா, ஜோகோவிச், எம்.எஸ்.தோனி ஆகியோரிடம் ஒரே மாதிரி அதிசய குணாதிசயங்கள் இருக்கின்றன என பாராட்டு தெரிவித்தார்.
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளைக் காண இந்திய அணியின் தீப்தி சர்மா அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் தீப்தி சர்மா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
ஜோகோவிச் குறித்து பேசும்போது அனைவரும் அவரது மனதிடம் குறித்து பேசுகிறார்கள்.
எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் அவர் தனது விடாமுயற்சியைத் தொடர்பவர்.
கிரிக்கெட்டில், எம்.எஸ்.தோனி இதே மாதிரியானவர் என நான் நினைக்கிறேன்.
எம்.எஸ். தோனி மிகவும் அமைதியானவர். அழுத்தமான சூழ்நிலைகள் வந்தாலும் அவர் சிறப்பாகக் கையாள்வார்.
அதைப் பார்க்கும்போது அவர் அழுத்தமான சூழ்நிலையில் இருப்பதுபோலவே இருக்காது. அவ்வளவு எளிதாக அழுத்தங்களை எதிர்கொள்வார்.
ஜோகோவிச், தோனி இருவரிடமும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருத்தல், பலமாக இருத்தல் என்ற அதிசயமான குணாம்சங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.
அவர்கள் விளையாடுவதைப் பார்த்து, அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி உறுதியுடன் இருப்பதைக் கற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி, சி.எஸ்.கே. அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
இதேபோல், ஜோகோவிச் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 428 வாரங்கள், உலக அளவில் முதலிடத்தில் இருந்து சாதனை புரிந்துள்ளார். 24 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.